இப்போதும் தோன்றும் நாட்டுப்புறக் கதைகள்!

First Published : 20 May 2012 12:00:00 AM IST


நாட்டுப்புறமாவது? கதைகளாவது? அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? பிறந்ததிலிருந்து சாகும் வரை மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான். கதை கேட்கவும், படிக்கவும் யாருக்கு நேரம் இருக்கிறது? மனதிருக்கிறது என்று சொல்பவரா நீங்கள்?  நீங்கள் அலுத்துக் கொள்வதிலும் உண்மையில்லாமல் இல்லை. பிறக்கப் போகும் குழந்தைக்கு பள்ளியில் இடம் பிடிக்க அலையும் காலம் இது. என்றாலும், கதைகளும், கலைகளுமாக ஓர் உலகம் இயங்கத்தான் செய்கிறது.பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் இயக்குநரான சேவியர் அந்தோனி, இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கதைகளை கேட்டிருக்கிறார். 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அக்கல்லூரியின் காட்சித் தொடர்பியல்துறையின் தலைவராகவும் இருக்கிறார்.  ""நாட்டுப்புறக் கதைகள் என்றால் ஏதோ பழங்காலத்தின் கதைகள் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்பவும் புத்தம் புதிய நாட்டுப்புறக் கதைகள் தோன்றியிருக்கின்றன'' என்கிறார் அவர்.    ""நான் திண்டுக்கல் மாவட்டம் மிக்கேல் பாளையத்தில் பிறந்தேன். பி.எஸ்ஸி இயற்பியல், எம்.ஏ., இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், ஊடகத் தொடர்பியலில் இளமுனைவர், முதுமுனைவருக்கான ஆய்வு என படிப்பில் ஒரு சுற்று வந்தேன்.  ஆனால் எனக்குச் சிறுவயதில் இருந்தே நாட்டுப்புறக் கதைகளிலும், கலைகளிலும் ஆர்வம் இருந்து வந்தது. அதிலும் நாட்டுப்புறக் கதைகளில் நிறைய ஆர்வம். அந்த ஆர்வத்தின் காரணமாக சுமார் 20 ஆயிரம் நாட்டுப்புறக் கதைகளைப் படித்தும், கேட்டும் தெரிந்து கொண்டேன்.  நாட்டுப்புறக் கதைகள் மக்களை மிகவும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவர்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமானவை. அவர்களை வெற்றிகரமாகச் சென்றடையக் கூடியவை. குழந்தைகள் முன்னேறுவதற்கான திசை வழிகளைக் காட்டக் கூடியவை; முன்னேறுவது எப்படி? என்பதை விளக்கும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தெரிந்து கொண்டேன்.  எனவே தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்து நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டு, அவற்றை பதிவு செய்து கொண்டு வந்தேன். பின்பு அவற்றை நூல் வடிவில் கொண்டு வந்தேன். மாணவர்களுக்கு திசை வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் பலர் என்னுடைய புத்தகங்களில் உள்ள கதைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  நாட்டுப்புறக் கதைகள் என்றால் பழங்கதைகள் - நீதிக் கதைகள் - பாட்டி காலத்தைச் சேர்ந்தவை என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. நாட்டுப்புறக் கதைகள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய நிகழ்வுகளைச் சித்திரிப்பவை. உயிரோட்டமாக வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் எக்காலத்திலும் புதிய புதிய நாட்டுப்புறக் கதைகள் தோன்றும் என்பதே உண்மை.  உதாரணமாக, 2004 டிசம்பரில் தமிழ்நாட்டை சுனாமிப் பேரலை தாக்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்களை இழந்தனர். உற்றார், உறவினர்களை இழந்தனர். வாழ்க்கையை இழந்தனர். அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய மனதில் பெரிய கேள்வி. சுனாமி ஏன் வந்தது?... சுனாமி ஏன் வந்தது?...  இந்தக் கேள்வியை அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டார்கள். அதற்குப் பெரியவர்கள் குட்டிக் கதைகளைச் சொல்லி பதில் அளித்தார்கள். பாட்டிக்கு அவர்களுடைய பாட்டிகள் சொன்ன கதைகளை பேரன்,பேத்திகளுக்குச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் தமிழகம் முழுக்கச் சென்று நான் சேகரித்தேன். 350 கதைகளைக் கேட்டேன். அவர்கள் சொன்னதைப் பதிவு செய்தேன். அவற்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அந்தக் கதைகளில் 300 கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவை நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டு உள்ளன.  அந்தக் கதைகளில் இருந்து நான் தெரிந்து கொண்டது இதுதான்:  இந்த பூமி எவ்வளவோ பேரழிவுகளைக் கண்டிருக்கிறது. என்றாலும் அந்த அழிவுகளுக்குப் பிறகும், மீண்டும் உயிர்ப்போடு இயங்க பூமி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அதுபோலவே பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். அப்படித் தகவமைத்துக் கொள்வதின் ஒரு பகுதிதான் இந்த சுனாமி நாட்டுப்புறக் கதைகள்.  சுனாமியை நேரில் அனுபவித்துப் பயந்துபோன குழந்தைகளின் மனதில் இருந்த பயத்தைப் போக்கும்விதமாக, பாட்டிகள் நிறையக் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். கடலைப் பார்த்துப் பயப்படாமல், மீண்டும் கடலோடு நட்புறவு கொள்ளும்விதமாக அவர்களுடைய மனதைப் பக்குவப்படுத்தியிருக்கிறார்கள்.  அதுமட்டுமல்ல, இன்றைய சமூகத்தின் மீதான நிறைய விமர்சனங்களும் இந்தக் கதைகளில் காணப்படுகின்றன. சுற்றுச் சூழல் பாதிப்பு, அணுக்கதிர் வீச்சு பாதிப்பு, அந்நியக் கலாசாரத்தின் தாக்கம், மோசமான திரைப்படங்களைப் பற்றிய கோபம், பணம் சம்பாதிக்க கிரிக்கெட் விளையாட்டு பயன்படுவது, அரசியல்வாதிகளின் ஊழல் என இன்றைய வாழ்வின் சீரழிவுகளைச் சாடும் போக்கு இந்தக் கதைகளில் காணப்படுவதுதான் ஆச்சரியம்.  இந்தக் காலத்திலாவது பாட்டியாவது, கதைகள் சொல்வதாவது என்று பலர் நம்ப மறுக்கிறார்கள். எவ்வளவுதான் தொலைக்காட்சியின் தாக்கங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்குப் படிப்புச்சுமை தலைக்கு மேல் இருந்தாலும் கதை கேட்கும் பழக்கம் இன்னும் போகவில்லை. அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் அடித்தட்டு மக்களிடம் இந்தப் பழக்கம் இன்னும் இருக்கிறது. பணக்காரக் குடும்பங்களில் கதை சொல்லும், கேட்கும் பழக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது.  இன்னொன்றைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். உழவர்கள் பொங்கல் வைப்பது வழக்கம். வீட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சுனாமிக்குப் பிறகு சாயல்குடியிலிருந்து ஆறு கி.மீ. தூரம் உள்ள மூக்கையூர் கடற்கரையில் கடற்கரையில் சுனாமிப் பொங்கல் வைத்து, கடலை வழிபட்டிருக்கிறார்கள். புதிய வழிபாட்டுப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்றார்.

0 comments:

Followers